பெண்களை கேலி–கிண்டல்: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பள்ளிப்பட்டு தாலுகா கொத்தகுப்பம் கிராமத்தில் மலை மீது ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு தாலுகா கொத்தகுப்பம் கிராமத்தில் மலை மீது ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று மாலை இந்த கோவிலில் மலை சுற்று திருவிழா நடந்தது. இதில் கொத்தகுப்பம் கிராம பெண்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அருகில் உள்ள கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், அந்த பெண்களை கேலி–கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் சாமி தரிசனம் முடிந்து மலை அடிவாரம் வந்த பெண்கள், அங்கிருந்த போலீசாரிடம் தங்களை கிண்டல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். அதற்கு போலீசார், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண்கள் மற்றும் கொத்தகுப்பம் கிராம பொதுமக்கள் திடீரென பொதட்டூர்பேட்டை–அத்திமாஞ்சேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.