பொங்கல் விடுமுறை முடிந்தது: நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்


பொங்கல் விடுமுறை முடிந்தது: நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 2:00 AM IST (Updated: 17 Jan 2017 11:56 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விடுமுறை முடிந்ததால் நெல்லை ரெயில், பஸ்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை,

பொங்கல் விடுமுறை முடிந்ததால் நெல்லை ரெயில், பஸ்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 13–ந் தேதி முதல் 16–ந் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை 17–ந் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது. அதனால் அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. இதையடுத்து வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

இன்று (புதன்கிழமை) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அதனால் வெளியூரில் இருந்து வந்தவர்கள் நேற்று மாலை ஊர் திரும்பினார்கள்.

பயணிகள் கூட்டம்

இதனால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் வந்தவுடன் பயணிகள் கூட்டம் நிரம்பியதால், உடனுக்கு உடன் பஸ் புறப்பட்டு சென்றது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு 20 பஸ்களும், கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு 30 பஸ்களும், கோவைக்கு 15 பஸ்களும், திருப்பூருக்கு 15 பஸ்களும், மதுரைக்கு 30 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ரெயில் நிலையத்தில்...

அதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. அதேபோல் இரவு 7.40 மணிக்கு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டியில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரெயில், பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டு இருந்தது.


Next Story