பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்–இளைஞர்கள் போராட்டம்


பாளையங்கோட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்–இளைஞர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 2:15 AM IST (Updated: 18 Jan 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்–இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்–இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரையில் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. நெல்லையில் உள்ள முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் அதிக அளவில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் தொடரும்

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் வைத்து இருந்தனர்.

இது குறித்து முகநூல் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. காட்சி பட்டியில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும். அப்படியில்லையென்றால் இந்த போராட்டம் தொடரும் என்றனர்.

போலீஸ் குவிப்பு

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டனர். சில பெண்கள் கருப்பு சேலை அணிந்து இருந்தனர். இரவு வரை போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பிரதீப்குமார் தலைமையில் வ.உ.சி.மைதானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது.


Next Story