சங்கரன்கோவில் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் கைது
தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் நேற்று வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் நேற்று வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த குருவிகுளம் அருகே உள்ள செட்டிகுளம் மேல தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் மாடசாமி (வயது 24). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (63). ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர். மாடசாமி குடும்பத்துக்கும், கருப்பசாமி குடும்பத்துக்கும் இடையே தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலையில் மீண்டும் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இருவரது குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வாலிபர் கொலைதகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கம்பு, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் மாடசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கருப்பசாமி படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாடசாமி உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைதுஇதுதொடர்பாக குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.