கோவில்பட்டியில் பஸ்–ஆட்டோ மோதல்; 2 பேர் பலி 10 பேர் படுகாயம்


கோவில்பட்டியில் பஸ்–ஆட்டோ மோதல்; 2 பேர் பலி 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Jan 2017 12:35 AM IST (Updated: 18 Jan 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நேற்று இரவில் பஸ், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நேற்று இரவில் பஸ், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்–ஆட்டோ மோதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த 11 பேர் நேற்று ஒரு ஆட்டோவில் கோவில்பட்டி ஆவல்நத்தம் விலக்கு அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் சாமி கும்பிட சென்றனர். அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுருட்டுலிங்கம் (29) என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு இரவு 9 மணி அளவில் ஊரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆவல்நத்தம் விலக்கை தாண்டி சர்வீஸ் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த போது, எதிரே நெல்லையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் சென்றது. பஸ்சும், ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் வந்தனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டனர்.

2 பேர் பலி

இதில் கந்தசாமி மனைவி லோகநாயகி (65), முருகேசன் மனைவி நித்திய கல்யாணி (60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் இந்த விபத்தில் டிரைவர் சுருட்டுலிங்கம், வைத்திலிங்கம் மனைவி அன்னபூரணி (50), மீனாட்சி (70), நீலாகாசினி (70), ஆவுடையப்பன் (45), அவருடைய மனைவி ராஜேசுவரி (40), மகன் தாமோதரன் (7), சண்முகசுந்தரம் (75), ஸ்ரீசித்தர் மகள் ராஜேசுவரி (8), வீரா (40) ஆகிய 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான லோகநாயகி, நித்தியகல்யாணி ஆகியோரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story