ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி கீரமங்கலத்தில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்,

சாலை மறியல்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தியதாக கூறி போலீசாரால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் கீரமங்கலத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஊர்வலம் சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கொத்தமங்கலத்திலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினார்கள். இதில் பலர் கலந்து கொண்டு பீட்டா அமைப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆவுடையார்கோவில்

அறந்தாங்கி அருகே உள்ள வைரியவயல் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாட்டுவண்டி பந்தயம், குதிரை பந்தயம் நடைபெற்று வந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவால், கடந்த 2 ஆண்டுகளாக பந்தயங்கள் நடைபெறாமல், இப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வைரியவயலில் உள்ள முனியாண்டி அம்மன் கோவில் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதேபோன்று வடகாடு அருகே உள்ள வளிச்சங்காடு கைகாட்டியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறந்தாங்கியில் தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் சோலைராஜ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story