பெரம்பலூரில் இளைஞர்கள்- இளம்பெண்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் இளைஞர்கள்- இளம்பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:30 AM IST (Updated: 18 Jan 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி பெரம்பலூரில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியாக கூறி போலீசாரால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி அனுமதி வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும், மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க கோரியும் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோஷம்

அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து அரசியல் கட்சி சார்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள், சமூக வலைத்தள இளைஞர்கள், அன்னமங்கலம் பஞ்சாயத்து ஜல்லிக்கட்டு பேரவை இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலதரப்பை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story