திருட்டு மணல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலி


திருட்டு மணல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 18 Jan 2017 4:30 AM IST (Updated: 18 Jan 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே திருட்டு மணல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி,

மணல் குவாரி

திருச்சி அருகே உத்தமர்சீலியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை திருச்சி ஏர்போர்ட் பகுதி ராஜமாணிக்கம் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று குவாரியில் இருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தது.

லாரியை திருச்சி இந்தியன் பேங்க் காலனியை சேர்ந்த மைக்கேல் (60) ஓட்டினார். அப்போது திடீரென பாதையில் மண் சரிவு ஏற்பட்டு அருகில் உள்ள பள்ளத்தில் லாரி தலை கீழாக கவிழ்ந்தது. இதில் லாரியில் மணல் மேல் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மணல் சரிந்து அமுக்கியது.

3 பேர் பலி

இதில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கட்டக்குடி கிராமத்தை சேர்ந்த கோபால் (32), ரெங்கசாமி (35) மற்றும் திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஓலையூரை சேர்ந்த சக்திவேல் (30) ஆகிய 3 பேர் மணலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுலிக்கிப்பட்டி பெரியசாமி (30), கட்டக்குடி ரெங்கன் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவர் மைக்கேல் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன், கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசித்ரா, பெரியசாமி, விஜயகுமார் மற்றும் போலீசார், ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர், தாசில்தார் சண்முக ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையில் விபத்து பற்றி அறிந்த பக்கத்து கிராம மக்கள் மற்றும் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மணல் குவாரியில் திரண்டனர்.

அவர்களின் உதவியோடு மீட்பு குழுவினர் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story