ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சாலை மறியல்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Jan 2017 10:30 PM GMT (Updated: 17 Jan 2017 8:35 PM GMT)

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

போராட்டத்துக்கு கட்சியின் மண்டல செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாமுவேல், மாவட்ட பொருளாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி அகிம்சை வழியில் போராடும் மாணவ-மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும், கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 28 பேரை கைது செய்தனர்.

அதேபோல ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி வைத்தீஸ்வரன்கோவில் மேலமுக்கூட்டில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு நடத்த உடனே அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மயிலாடுதுறை-சீர்காழி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்அறிந்த வந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலைமறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story