ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:00 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதுடன் தை மாதம் 30-ந் தேதிக்குள் இந்த விளையாட்டுகள் நடைபெற அரசு தகுந்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலை விழுப்புரம் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், மைதிலிராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, வேம்பி ரவி, பிரபாகரன், நகர அவைத்தலைவர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தினால் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மறியல் சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி உள்பட 200 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story