தாராபுரத்தில் வறட்சியால் பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை


தாராபுரத்தில் வறட்சியால் பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 18 Jan 2017 3:30 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

பயிர்கள் கருகியது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ரெட்டிபாளையத்தைச்சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42) விவசாயி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ரேணுகா, பிரியதுர்கா என்ற மகள்களும், திவாகரன் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ரேணுகாவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. 2-வது மகள் பிரியதுர்கா 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் திவாகரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் பஞ்சப்பட்டியைச்சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தை விஜயகுமார் குத்தகைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

தற்போது அந்த நிலத்தில் 2 ஏக்கரில் மக்காச்சோளமும், 1 ஏக்கரில் பீட்ரூட்டும் சாகுபடி செய்திருந்தார். இந்த ஆண்டு இந்த பகுதியில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. விஜயகுமார் குத்தகைக்கு வாங்கியிருந்த தோட்டத்து கிணற்றிலும் தண்ணீர் இல்லாமல் கிணறு வறண்டுபோய் விட்டது. இதனால் சாகுபடி செய்து இருந்த பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி விஜயகுமார் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த பயிர்கள் கருகுவதைப்பார்த்து வேதனை அடைந்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

பிறகு மனமுடைந்த நிலையில் வீட்டிற்கு வந்ததும் மனைவி லட்சுமியிடம் “விவசாயத்திற்காக நிறைய கடன் வாங்கி விட்டேன். பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டது. இனி எப்படி கடனை திருப்பிக்கட்டுவது” என்று கூறி கவலைப்பட்டுள்ளார். அதைக்கேட்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் விஜயகுமாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது விஜயகுமார் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

வீட்டில் மயங்கிக்கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விஜயகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று விஜயகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story