ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.10 ஆயிரம் எடுத்த பொதுமக்கள் பூட்டிக்கிடக்கும் மையங்களில் பணம் நிரப்ப கோரிக்கை
ஈரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பொதுமக்கள் ரூ.10 ஆயிரம் எடுத்தனர்.
ஈரோடு,
ஈரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பொதுமக்கள் ரூ.10 ஆயிரம் எடுத்தனர். பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
பணத்தட்டுப்பாடுஉயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்கள் பணத்தை எடுக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதனால் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
வங்கிகளில் போதுமான பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் கேட்கும் பணம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று தேவைப்படும்போது பணத்தை எடுத்து வருகிறார்கள். முதலில் ரூ.2 ஆயிரத்து 500 என்றும், பின்னர் ரூ.4 ஆயிரத்து 500 என்றும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.
ரூ.10 ஆயிரம்இந்தநிலையில் ஏ.டி.எம்.களில் ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் பொதுமக்கள் பலர் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றனர். ஈரோட்டில் ஒரு சில ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. அங்கு பொதுமக்கள் ஒரு ஏ.டி.எம். அட்டைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுத்தனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் விரைவாக பணம் தீர்ந்தது.
ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளில் ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
பணம் நிரப்ப கோரிக்கைஇதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளில் ரூ.10 ஆயிரம் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணத்தை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் பணத்தை நிரப்ப வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’, என்றனர்.