குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை


குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2017 3:30 AM IST (Updated: 18 Jan 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் துணை சூப்பிரண்டு எச்சரிக்கை

ஊட்டி,

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் எச்சரிக்கை விடுத்தார்.

சாலை பாதுகாப்பு வார விழா

நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை தாங்கி வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுரை கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் அதிகளவு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டு உள்ளது. எனவே வளைவுகளில் வாகனங்களை முந்துவதற்கு முயற்சிக்க கூடாது. கல்லட்டி போன்ற செங்குத்தான இறக்கம் கொண்ட சாலைகளில் முதல் மற்றும் 2-வது கியரில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்.

சரக்கு வாகனங்கள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆள் இல்லா ரெயில்வே கிராசில் வேகத்தை குறைத்து இருபுறமும் ரெயில் வருகிறதா என்று பார்த்து விட்டு கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். ஆஸ்பத்திரிகள் வழியாக செல்லும் போது நோயாளிகளின் நலன் கருதி அதிக ஒலி எழுப்பாமல், மித வேகத்தில் செல்ல வேண்டும்.இதேபோல் பள்ளிகள் இருக்கும் பகுதியில் மாணவ- மாணவிகளின் நலன் கருதி மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பாரத்தை ஏற்றக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊட்டி நகர மத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

Next Story