புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், சமூக அமைப்புகள் கோரிக்கை


புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம், சமூக அமைப்புகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Jan 2017 3:15 AM IST (Updated: 18 Jan 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுச்சேரி

புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

பிளஸ்–2 பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் புதுவை மற்றும் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இதுவரை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்) மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாணவர் கூட்டமைப்பு அமைப்பாளர் சாமிநாதன், தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், பெற்றோர் மாணவர் சங்க தலைவர் வை.பாலா, உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ரத்து செய்ய வேண்டும்

புதுவையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1200–க்கும் அதிகமாக இடங்கள் உள்ளன. இந்தநிலையில் தற்போது மத்திய அரசு அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்) முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் புதுவையில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே புதுவை மாநிலத்தில் இந்த நீட் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். புதுவை மாணவர்களை பாதிக்காத வகையில் அரசு சட்டசபையில் தனி சட்டம் இயற்றி ஏற்கனவே நடைபெறுவது போல் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். புதுவை உரிமைகள் பாதிக்காத வகையில் சீட் நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக கூறினார். அப்போது அமைச்சர் கமலக்கண்ணன் உடனிருந்தார்.


Next Story