பாகூர் அருகே இரு கிராமங்களுக்கிடையே மோதல் சம்பவத்தில் 800 பேர் மீது வழக்கு


பாகூர் அருகே இரு கிராமங்களுக்கிடையே மோதல் சம்பவத்தில் 800 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Jan 2017 3:00 AM IST (Updated: 18 Jan 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் 2 கிராமங்களையும் சேர்ந்த 800 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

புதுச்சேரி,

பாகூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் 2 கிராமங்களையும் சேர்ந்த 800 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்

மாட்டுப் பொங்கல் தினத்தன்று புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் பெரியார்நகர்பேட் பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் அவர்கள் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு பெரியார்நகர்பேட் பகுதியை சேர்ந்தவர்கள், குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து குருவிநத்தத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பெரியார் நகர்பேட் பகுதிக்கு சென்று அங்கு இருந்த வாலிபர்களை தாக்கியதாக தெரிகிறது. அது பற்றிய தகவல் அறிந்தவுடன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆயுதங்களுடன் சென்றனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குருவிநத்தத்தை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் பெரியார்நகர் பேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தி, நீங்கள் இங்கு வரக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்கள் ஊருக்கு சென்று பெரியார்நகர் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கி விட்டதாக தெரிவித்தனர். இதனால் குருவிநத்தத்தை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு இரும்பு கம்பி, தடி போன்ற ஆயுதங்களுடன் பெரியார் நகர் பேட் பகுதிக்கு சென்றனர்.

கல்வீசி தாக்குதல்

அதைப்பார்த்தவுடன் பெரியார்நகர் பேட் பகுதியை சேர்ந்த மக்கள் ஆயுதங்களுடன் அங்கு கூடினர். இதனால் இருகிராமங்களுக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் பெரியார்நகர் பேட் பகுதியை சேர்ந்த 5 வீடுகள், 5 மோட்டார் சைக்கிள்கள், மாரியம்மன் கோவிலின் மேற்பகுதி ஆகியவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டன. மேலும் போலீஸ் வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. அதனால் நிலைமை மோசமடைந்தது.

துப்பாக்கி சூடு–தடியடி

அதனைத்தொடர்ந்து பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் யு.விஜயகுமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 9 ரவுண்டுகள் சுட்டார். அப்போது கலவரக்காரர்கள் அவர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது மண்டை உடைந்தது. நிலைமை மேலும் மோசமடையவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதனால் கலவரக்காரர்கள் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் காயம் அடைந்தனர்.

800 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் யு.விஜயகுமார், நேற்று பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரனிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் சம்பவ இடத்தில் நடந்த கலவரத்தின்போது இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக்கொண்டதாகவும், அதில் தன்மீதும் கல்வீசப்பட்டதாகவும், அதனால் காயம் அடைந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக கூடியது, போலீஸ் மீது தாக்குதல், போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியது உள்பட 8 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் குருவிநத்தம் புதுக்காலனி மாரியம்மன்கோவில் வீதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உள்பட 500 பேர் மீதும், பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் உள்பட 300 பேர் மீதும் என மொத்தம் 800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பதற்றம் நீடிப்பு

இந்த மோதலை தொடர்ந்து குருவிநத்தம் மற்றும் பெரியார் நகர் ஆகிய 2 பகுதிகளிலும் நேற்று 2–வது பதற்றம் நீடித்தது. அங்கு அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்றுக் காலை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, பெரியார் நகர் வாழப்பட்டு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதுபற்றி தகவல் அறிந்ததம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பிற்பகலில் இருதரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை பாகூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாவட்ட துணை கலெக்டர் உதயக்குமார் இந்த சமாதானக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரகீம், தாசில்தார் பிரபாகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும், மேற்கொண்டு எந்த பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது என்றும், தாக்குதல் குறித்து இரு தரப்பினரும் எழுத்துபூர்வ புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் இரண்டு பகுதிகளையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடங்கிய சமாதானக்குழு அமைக்கப்பட்டது.


Next Story