சந்தவாசலில் விவசாயியை தாக்கிய மகன் உள்பட 2 பேர் கைது
சந்தவாசலில் தந்தையை தாக்கிய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணமங்கலம்
சந்தவாசல் படவேடு சின்னகோட்டகரை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), விவசாயி. இவருக்கு மனோகரன் (29), மூர்த்தி (27) என 2 மகன்கள் உள்ளனர். கணேசன், இளைய மகன் மூர்த்தியுடன் வசித்து வருகிறார். கணேசனும், மூர்த்தியும் ஊர் பஞ்சாயத்தாருடன் சென்று, மனோகரனிடம் நமது குடும்ப நகையில் எங்களுக்கு சேர வேண்டியதை கொடு என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர் மனோகரன், அவரது மைத்துனர் ரேணுகோபால் (27) மற்றும் உறவினர் ராகவேந்திரன் ஆகியோர் நிலத்தில் வேலை செய்து கொண்டிந்த கணேசனை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். இதுகுறித்து சந்தவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனையும், ரேணுகோபாலையும் கைது செய்தனர். மேலும் ராகவேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடு சூறைஇந்த நிலையில் ரேணுகோபால் கைது செய்யப்பட்டதை அடுத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரேணுகோபாலின் மைத்துனர் தரசதன் (27), உறவினரான பழனி மற்றும் சிலர் படவேட்டில் உள்ள மூர்த்தியின் மாமனார் ராஜமாணிக்கம் என்பவரின் குடிசை வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அவர்கள் பெட்ரோல் ஊற்றி குடிசை வீட்டை தீ வைத்து எரித்தனர்.
இதுகுறித்து ராஜமாணிக்கம் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தசரதன் மற்றும் பழனியை கைது செய்தனர்.