ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 3:56 AM IST (Updated: 19 Jan 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

ஜல்லிக்கட்டுக்கு தடை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சையில் நேற்று முன்தினம் மாணவர்கள் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பும், பின்னர் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் போராட்டத்தை அவர்கள் முடித்துக்கொண்டனர்.

2-வது நாளாக போராட்டம்

நேற்று 2-வது நாளாக தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாணவ, மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம், ஆக, ஆக மாணவர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தஞ்சையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வந்து கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை உடனே நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் தொடரும்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், “ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை விதித்து இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்”என்றனர். மாணவர்களின் போராட்டத்தால் தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story