ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி திருப்பூரில் நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி திருப்பூரில் நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 4:30 AM IST (Updated: 19 Jan 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி திருப்பூரி கொட்டும் பனியில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பூர்

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி திருப்பூரில் நள்ளிரவிலும் தொடர்ந்து போராட்டம் நடந்தது. கொட்டும் பனியில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி திருப்பூரை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பும், கலெக்டர் அலுவலகம் எதிரிலும் காலை 8 மணிக்கு ஒன்று திரண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல, செல்ல மாணவ-மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. தன்னார்வ அமைப்பினர், சமூக வலைதள நண்பர்கள் ஆர்வத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

குழந்தைகளுடன் பெண்கள்

கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் மாணவ-மாணவிகள் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு கலந்துகொண்டனர். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருள் சூழ்ந்ததும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் இரவு 8.30 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பெட்டி பெட்டியாக இரவு உணவு வந்து சேர்ந்தது. தக்காளி சாதம், புரோட்டா, சப்பாத்தி என பல்வேறு உணவு வசதியை சமூக ஆர்வலர்கள் செய்து கொடுத்தார்கள்.

இரவு உணவை சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் இளைஞர்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் இரவு உணவு முடித்து விட்டு மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை போராட்டம் தொடர்ந்து நடந்தது. கல்லூரி மாணவிகளும் நடுரோட்டிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அங்கேயே படுத்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக கொட்டும் பனியில் தங்கள் குழந்தைகளுடன் பெண்கள் கலந்துகொண்டனர்.

பொதுமக்கள் ஆதரவு

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்து இருந்த இடத்தில் மின்சார வசதியில்லாமல் இருள்சூழ்ந்து இருந்தது. மாணவ- மாணவிகள், குழந்தைகளுடன் பெண்களும் அமர்ந்து இருந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மின்விளக்கு வசதியை செய்து கொடுத்தனர். இரவு உணவு சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் கோஷங்கள் எழுப்பியவாறு அமர்ந்து இருந்தனர். நள்ளிரவு வரை மாணவ-மாணவிகள் குளிரிலும் அங்கேயே படுத்திருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். வெட்டவெளியில் மாணவ-மாணவிகள் குளிரிலும் அமர்ந்து இருந்ததை பார்த்து தன்னார்வலர்கள் சிலர் பெட்ஷீட் வசதி செய்து கொடுத்தனர். மாணவ-மாணவிகள் சோர்வடையாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததை பார்த்த பொதுமக்கள் இரவில் போராட்டம் நடந்த இடத்தில் வந்து அமர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். இதனால் போராட்டம் நடந்த இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

உண்ணாவிரதம்

இதற்கிடையில் அவினாசியில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் நேற்று புதிய பஸ் நிலையம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நேற்று காலை 10 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தாரை, தப்பட்டையுடன் போராட்டத்தை தொடங்கினர். பிறகு உண்ணாவிரதப்போராட்டத்தின் நிறைவாக நேற்று மாலை, 2 காளை மாடுகளுடன் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து போராட்டக்குழுவினர் பேரணியாக சென்றனர். இப்பேரணி கோவை மெயின் ரோடு, சேவூர்ரோடு வழியாக செங்காடு திடலை அடைந்தனர். அங்கு போராட்டக்குழுவினர், சிலர் கண்களை துணியால் கட்டிக்கொண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும், ஜல்லிக்கட்டுத்தடையை உடனடியாக நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் அன்னிய குளிர் பானங்களை புறக்கணிக்கும் வகையில் அந்த குளிர்பானங்களை தரையில் ஊற்றி எதிர்ப்புத்தெரிவித்தனர்.

இதில் மத்திய-மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்காவிட்டால், மீண்டும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத்தெரிவித்து போராட்டத்தை நிறைவு செய்தனர் 

Next Story