டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது.
நெல்லை,
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களின் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது.
ஆலோசனை கூட்டம்நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சிகளின் இயக்குனர் மகரபூசணம் தலைமை தாங்கினார். கலெக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிகளின் இயக்குனர் மகரபூசணம் பேசியதாவது–
நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்படும் பகுதியில் உடனடியாக மருத்துவ குழுக்களை அனுப்பி சிகிச்சை அளிக்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் சில ஊர்களில் தொடர்ந்து காய்ச்சல் தாக்கம் உள்ளது. அந்த ஊர்களில் அனைத்து முறைகளிலும் கொசு ஒழிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கூட்டு துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டும். குப்பைகள் இல்லாத வகையில் தூய்மையை பராமரிக்க வேண்டும். இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்கள் மாஹின், அபுபக்கர், முத்துக்குமார் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்கடையநல்லூர் பெண்கள் பாடசாலை தெருவை சேர்ந்த முகைதீன் பாத்திமா (வயது 22) என்ற பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நகரசபை நிர்வாக ஆணையர் பிரகாஷ், கடையநல்லூர் வந்தார். பேட்டை ரைஸ் மில் தெரு, சந்தை தெரு, காதர் முகைதீன் பள்ளி வாசல் தெரு, மேற்கு மலம்பாட்டை தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் மற்றும் ரகுமானியாபுரம் தெரு பகுதியிலும் காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக நகரசபை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. நகரசபை நிர்வாக ஆணையாளர் பிரகாஷ், நெல்லை மண்டல நகரசபை இயக்குனர் பூங்கொடி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், தென்காசி உதவி கலெக்டர் வெங்கடேஷ், நகரசபை ஆணையாளர்கள் அயூப்கான், பொன்னம்பலம், முருகேசன், ஏகராஜ், ராஜேந்திரன், பவுன் ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.