டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள்-பணம் கொள்ளை


டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள்-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Jan 2017 4:27 AM IST (Updated: 19 Jan 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

மது பாட்டில்கள்-பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, அருகில் உள்ள குளிர்பானக்கடையிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

டாஸ்மாக் கடை

கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விஜயநகரியை சேர்ந்த சந்திரபோஸ் (வயது 48) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார்.

வடக்கு தாமரைகுளத்தை சேர்ந்த சக்திவேல் (43), புதுக்கடையை சேர்ந்த ரவி (52) ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம் போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

கொள்ளை

அதன்பிறகு நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் இரும்பு ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கு இருந்த பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று காலை டாஸ்மாக் கடை திறந்து இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து, மேற்பார்வையாளர் சந்திரபோசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது டாஸ்மாக் கடையில் வைத்து இருந்த ரொக்கப்பணம் 1,200 மற்றும் ரூ.49 ஆயிரத்து 256 மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

குளிர்பானக்கடை

டாஸ்மாக் கடையின் அருகே குளிர்பானக்கடை உள்ளது. இதை நாகர்கோவில் கோட்டார் கம்போளத்தை சேர்ந்த குமார் என்பவர் நடத்தி வருகிறார். அந்த கடையின் இரும்பு ஷட்டரின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கு இருந்த ரொக்கப்பணம் 1,100 மற்றும் 40 குளிர்பான பாட்டில்கள், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கொட்டாரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story