ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் உண்ணாவிரதம், சாலை மறியலும் நடந்தது


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் உண்ணாவிரதம், சாலை மறியலும் நடந்தது
x
தினத்தந்தி 19 Jan 2017 4:57 AM IST (Updated: 19 Jan 2017 4:57 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நேற்று மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதன்ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் மாணவர்களின் போராட்டம் பல்வேறு இடங்களில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

தலைவாசலை அடுத்துள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அனுமதி கொடு, அனுமதி கொடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு என்றும், பீட்டா அமைப்பை தடை செய் என்றும் கோஷம் எழுப்பினர். பின்னர் நண்பகல் 12 மணிக்கு கல்லூரி மாணவர்கள் கோஷம் எழுப்பியபடி கல்லூரியில் இருந்து காட்டுக்கோட்டை பஸ் நிறுத்தம் வரை ஊர்வலமாக சென்றனர்.

மதியம் 2.30 மணிக்கு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் திரண்டு வந்து கல்லூரி எதிரே, காட்டுக்கோட்டையில் இருந்து சதாசிவபுரம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இடைப்பாடி

ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க கோரியும் இடைப்பாடியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக 500-க்கும் மேற்பட்டோர் கவுண்டம்பட்டியில் இருந்து இடைப்பாடி பஸ் நிலையம் வரை ஊர்வலமாக வந்து காமராஜர் சிலை அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்ததை தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவலிங்கம், நகர செயலாளர் பாஷா மற்றும் தி.மு.க.வினர் ஆதரவு தெரிவித்தனர். இதே போல் இடைப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் திடலில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்காடு

இதேபோல் ஏற்காடு டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் நேற்று காலை 11 மணியளவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பீட்டா அமைப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேச்சேரியில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மேச்சேரி பஸ் நிலையத்தில் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நங்கவள்ளி பஸ் நிலையம் அருகே இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாடுகளுடன் உண்ணாவிரதம்

தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, கிராம மக்கள், இளைஞர்கள் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாரியம்மன் கோவில் திடலில் பந்தல் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து நடந்த இந்த போராட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் சங்ககிரி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சக்திவேல் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு மீதான தடையை நீக்க கோரி கோஷமிட்டனர்.

இதனிடையே ஆத்தூர் பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மாணவர் அமைப்புகள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்த தடையை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதான சாலைக்கு வரக்கூடாது என்று கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆத்தூர் அருகே மல்லியக் கரையில் சந்தைபேட்டை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாரியம்மன் கோவில் திடலில் கூலமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தாரமங்கலம் மற்றும் தலைவாசல் பஸ்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

ஓமலூர்

ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓமலூர் தொகுதி பொறுப்பாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். மேட்டூர் தொகுதி பொறுப்பாளர் பிரபாகரன், ஓமலூர் நகர செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜ், சேலம் வடக்கு யுவராஜ், சேலம் மேற்கு ராஜ்குமார், சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜா நன்றி கூறினார்.

இதேபோல் சமூக வலைதளங்கள் மூலம் பரவிய தகவலின் பேரில், ஓமலூரில் நேற்று மாலை 4 மணிக்கு மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த இந்த மனிதசங்கிலியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சிறு வியாபாரிகள், கார், ஆட்டோ டிரைவர்கள், வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அங்கு குவிந்தனர்.

ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி மெயின்ரோட்டில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மனிதசங்கிலியாக அணிவகுத்து நின்றனர். இதையொட்டி அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் அழகு தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனிடையே மனிதசங்கிலியாக நின்றவர்கள், ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டபடி, தர்மபுரி மெயின்ரோட்டில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் வக்கீல் ஜவகர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ரவிசந்திரன், பிரகாஷ், செல்லதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், வட்டார தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், சின்னன், மணிகண்டன், தமிழக வாழ்வுரிமை கட்சி அன்புராஜா, நாம் தமிழர் நிர்வாகிகள் உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி

சங்ககிரியில் ஜல்லிக்கட்டை ஆதரித்து, யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சங்க தலைவர் சண்முகம் தலைமையில், சங்ககிரி மக்கள் மன்றம் இணைசெயலாளர் கனகராஜ், ஓம் ராம் அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து, பவானி மெயின் ரோடு, பழைய பஸ் நிலையம், புதிய இடைப்பாடி ரோடு, பழைய இடைப்பாடி ரோடு வழியாக சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு சங்ககிரி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தரராஜனிடம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

கொளத்தூர்

கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நேற்று கொளத்தூர் பஸ் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொளத்தூர் பஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இதனிடையே நேற்று முன்தினம் பெத்தநாயக்கன்பாளையத்தில் அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஆத்தூர் பொறுப்பாளர் சதீஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் மீது, சின்னமசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சன்னாசி கொடுத்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story