உளுந்தூர்பேட்டை, வானூர் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்


உளுந்தூர்பேட்டை, வானூர் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:03 AM IST (Updated: 19 Jan 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

உளுந்தூர்பேட்டை பகுதி பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் முன்பு நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கவேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு போராட்டக்காரர்கள், தாங்கள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த போராட்டம் இரவு 9 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

வானூரை அடுத்த ஆகாசம்பட்டில் உள்ள தனியார் கலைக்கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் புளிச்சப்பள்ளம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் இருந்து ஊர்வலமாக திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டுக்கு வந்து கூடினர். அங்கு அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டனர்.

சாலை மறியல்

வானூர் அருகே உள்ள விநாயகபுரம், ரங்கநாதபுரம், ராமாவரம், சேதனப்பட்டு ஆகிய 4 கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரங்கநாதபுரத்தில் உள்ள புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வானூர் தாசில்தார் காமாசிங், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரக்காணம்

மரக்காணம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மரக்காணத்தில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து முக்கிய சாலைகள் வழியாக பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.

இதேபோல் அனுமந்தை, ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இளைஞர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். 

Next Story