ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:30 AM IST (Updated: 19 Jan 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம் போலீசார் தடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த போராட்டம் கடலூர் மாவட்டத்திலும் நடந்து வருகிறது. இந்தநிலையில் விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்விவரம் வருமாறு:-

ரெயில் மறியல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் குழுவாக பிரிந்து பயணிகளை போல விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு சென்று, நடைமேடைக்கு செல்வதற்கான டிக்கெட் எடுத்து ரெயில் நிலையத்திற்குள் சென்றனர்.

இந்த தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் இருப்பு பாதை போலீசார் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.

தடியடி

இதற்கிடையே சென்னையில் இருந்து குருவாயூருக்கு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று மதியம் 12.20 மணிக்கு வந்தது. அப்போது, ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி திடீரென அந்த ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்ற சில இளைஞர்களை கீழே இறக்க போலீசார் முயன்றனர். இருப்பினும் இளைஞர்கள் இறங்காததால் தடியடி நடத்தி அவர்களை என்ஜினில் இருந்து போலீசார் கீழே இறக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ரெயில் முன்பு படுத்து போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து வெளியேற்றினர்.

சாலை மறியல்

பின்னர் மாணவர்கள், விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங் களை எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, பாலக்கரைக்கு வந்தனர். அப்போது, வெளிநாட்டு குளிர்பானங்களை சாலையில் ஊற்றி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story