தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிர போராட்டம்


தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிர போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:36 AM IST (Updated: 19 Jan 2017 5:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மதுரை

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பை உடனே தடுக்கவேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

மதுரை அலங்காநல்லூரில் கடந்த 16-ந் தேதி காலை 8.30 மணிக்கு உள்ளூர் மக்களும், வெளியூர் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா, முற்றுகை என பல வடிவங்களில் இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. அதாவது, நேற்று இரவு 8.30 மணியுடன் 60 மணி நேரம் கடந்த பிறகும் போராட்டம் ஓயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா முடிந்ததும், போலீசாரின் கண்காணிப்பை திசை திருப்பிவிட்டு கண்மாய் பகுதியில் காளைகளை அவிழ்த்துவிட்டனர். அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடித்தனர்.

மாநகரமே ஸ்தம்பித்தது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மதுரை தமுக்கம் மைதானம் முன்பு பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகரமே ஸ்தம்பித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கீழக்கரையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 20 கிலோ மீட்டர் நடைபயணமாக ராமநாதபுரம் நோக்கி வந்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி மாணவர்கள் கோவையில் நேற்று 2-வது நாளாக வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தினர். கோவை நகரில் உள்ள 18 கல்லூரிகள் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேலான கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நகரின் நாலாபுறம் இருந்தும் ஊர்வலமாகவும், கண்டன கோஷங்களை எழுப்பியவாறும் தொடர்ந்து அணி, அணியாக வந்ததால் கோவை நகரமே குலுங்க தொடங்கியது.

கடலூர்

கடலூர் விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டம் தக்கலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக நேற்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

சேலம்

சேலம் 5 ரோடு பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர். ஆரம்பத்தில் 500 பேருடன் தொடங்கிய இந்த போராட்டம் நேரம் செல்ல செல்ல 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கலெக்டர் அலுவலகம் பகுதியே ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் பூபாலன் (வயது 20), ராஜ்குமார் (20) ஆகிய இருவரும் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. ரெயில் மறியல் போராட்டமும் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் கவின்ராம் (22). பட்டதாரிகளான இவர்கள் இருவரும் நண்பர்கள். நாமக்கல்லில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த இவர்கள், திடீரென நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி ஜல்லிக்கட்டுக்கு ஆதராவக கோஷம் போட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினர். 10 ஆயிரம் பேர் குவிந்ததால் திருச்சி ஸ்தம்பித்தது.

நெல்லை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லையில் நேற்று 2-வது நாளாக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் திரண்டு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். இவர்களுக்கு ஆதரவாக நெல்லை அரசு சட்டக்கல்லூரி மற்றும் சித்தா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது திருநங்கைகள் ஒப்பாரி வைத்தனர்.

திருப்பூர்

திருப்பூரை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 4,500 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரேயும் காலை 8 மணியளவில் ஒன்று திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இந்த போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வேலூர்

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோட்டார்சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர். விருப்பாட்சி புரத்தில் பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. 

Next Story