ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் விடிய, விடிய போராட்டம்


ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் விடிய, விடிய போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:45 AM IST (Updated: 19 Jan 2017 5:36 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினார்கள்.

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று காலை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் குவிந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பின்னர் அங்கிருந்து மாணவ-மாணவிகள் மீண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு வந்தனர். மாலையில் மாணவ-மாணவிகள் கலைந்து செல்ல தொடங்கினாலும், சுமார் 500 மாணவர்கள் அங்கேயே இருந்தனர். இரவிலும் போராட்டம் தொடருவதை அறிந்த மாணவர்கள் மீண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு திரண்டு வந்தனர். மாணவர் களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் சிலரும் நேற்று இரவு வந்தனர். இரவு 8 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளும், பெண்கள் சிலரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம்

வ.உ.சி. பூங்காவில் சாமியனா பந்தல் அமைக்கப்பட்டது. வெளிச்சத்திற்காக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. மாணவர்களின் போராட்டத்திற்காக தன்னார்வலர்கள் பலர் உணவு, பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார்கள். மேலும், மாணவர்களும் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி உணவு சமைத்து சாப்பிட்டார்கள். மாணவர்களின் போராட்டத்தில் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உருவான வரலாறு குறித்த வீடியோ திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது. இரவு முழுவதும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டாவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த மாணவர்களின் போராட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும்....

இதேபோல் சத்தியமங்கலம், கோபி, சிறுவலூர், புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை, விஜயமங்கலம், நம்பியூர், சிவகிரி, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 

Next Story