ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 5:38 AM IST (Updated: 19 Jan 2017 5:38 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர், பொத்தேரி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

வண்டலூர்,

வண்டலூர், பொத்தேரி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

மாணவ, மாணவிகள் ஊர்வலம்

வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தின் முன்பு நேற்று காலை திரண்ட மாணவ, மாணவிகள் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச்சென்றனர்.

இதேபோல ரத்தினமங்கலத்தில் உள்ள தாகூர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

பொத்தேரி

பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவ, மாணவிகள் ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அரசியல் கட்சியினர் போராட்டம்

கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே தி.மு.க. முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.கே.தண்டபாணி, முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.டி.பிரசாத், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் ஏ.எஸ்.கறீம் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரப்பாக்கத்தில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் கபில் என்கிற கமலக்கண்ணன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

Next Story