ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 6:10 AM IST (Updated: 19 Jan 2017 6:10 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ, மாணவிகள் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை யொட்டி பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் கடந்த 2 வருடங்களாக பீட்டா என்ற அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததன் பேரில் ஜல்லிக்கட்டு நடத்த கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரிகள் உறுதி அளித்து இருந்த போதிலும் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மறுத்ததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியாமல் போனது. இதை தொடர்ந்து நகர் மற்றும் கிராமப்புற மக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சியுடன் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் தேசபந்து திடலில் பள்ளி, கலைக்கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம்அருகில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர், பந்தல்குடி, திருச்சுழி, சிவகாசி, ராஜபாளையம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட இடங்களில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 ஆயிரம் பேர்

மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவ, மாணவிகளின் இந்த போராட்டத்தினை யொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விருதுநகரில் போராட்டம் நடந்த திடலை சுற்றியும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. 

Next Story