ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் தொடர் போராட்டம் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்


ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் தொடர் போராட்டம் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 20 Jan 2017 2:00 AM IST (Updated: 20 Jan 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் நடந்த தொடர் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை,

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் நடந்த தொடர் போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மாணவ–மாணவிகள், இளைஞர்கள். பொதுமக்கள், தன்னார்வ தொண்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது.

சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு நேற்று 2–வது நாளாக போராட்டம் நடந்தது. காலை முதல் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் மனோ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து பேரணியாக நடந்து சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் பி.எம்.டி. கல்லூரி மாணவர்களும் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, போராட்டத்தில் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பு சங்கரன்கோவில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சங்கரன்கோவில் நகரை சேர்ந்த சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உணவுகள், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட்கள் வழங்கினார்கள்.

தென்காசி– திசையன்விளை

தென்காசி ஜெ.பி. கல்லூரி மாணவ– மாணவர்கள் மற்றும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி மாணவிகள் அவரவர் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். மாணவ– மாணவிகள் பலர் கோரிக்கைகளை அட்டைகளில் எழுதி கைகளில் வைத்திருந்தனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

திசையன்விளை மனோ கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். பின்னர் கல்லூரின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொம்மடிக்கோட்டை சங்கராபகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூடங்குளம் அருகே கூந்தன்குழி உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விக்கிரமசிங்கபுரம்–அம்பை

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் உள்ள மைதானத்தில் அம்பை பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி, மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பை கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அம்பை நீதிமன்ற வக்கீல்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வக்கீல் சங்க நிர்வாகிகள் அன்பரசு, முத்துக்குட்டி ஆகியோர் தலைமையில் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தது. இதில் வக்கீல்கள் பிரதாபன், ஆதிமூலகிருஷ்ணன், வள்ளுவராஜ், ஆதிமூலகணேஷ், கார்த்திக், மூர்த்தி, ராஜூ, ஆறுமுகம், சரவணன், சாமிநாதன், சுந்தரபாண்டி, ஜெகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story