ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் 3-வது நாளாக போராட்டம்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் 3-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2017 4:11 AM IST (Updated: 20 Jan 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் 3-வது நாளாக மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் 3-வது நாளாக மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காஞ்சீபுரத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 3-வது நாளாக நேற்று காஞ்சீபுரம் வணிகர் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் காஞ்சீபுரம் கிளையின் சார்பிலும், தமிழ்நாடு வருவாய் துறை ஊழியர்கள் சங்கம் சார்பிலும் தமிழகத்தின் பாரம்பரியத்தை காத்திட ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் துறையை கண்டித்தும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரத்தில் வக்கீல்களும் கோர்ட்டுகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். போராட்டத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள குழுவை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நிலத்தரகர் சங்க நிர்வாகிகள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட இடத்திலேயே நேற்று முன்தினம் தங்களது இரவு உணவை சாப்பிட்ட அவர்கள் தற்போது நல்ல முடிவு வரும் வரை போராட்டத்தை தொடர போவதாக அறிவித்து உள்ளனர்.

நேற்று முன்தினமும், நேற்றும் நடந்த போராட்டத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் பீட்டாவையும் அன்னிய பானங்களையும் தடைசெய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், புதுவாயல், புதுகும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை போன்ற பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்தணி

திருத்தணி அரசு கலை கல்லூரியை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லுரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து ம.பொ.சி. சாலை வரை கண்டன ஊர்வலம் நடத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூர்

வண்டலூரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் ஜி.எஸ்.டி. சாலையோரம் நின்று கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதே போல மறைமலைநகர் பஸ் நிறுத்தம், ஊரப்பாக்கம், ஆதனூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒன்று திரண்டு பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். 

Next Story