கோவில்பட்டியில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் பெண் சாவு


கோவில்பட்டியில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் பெண் சாவு
x
தினத்தந்தி 22 Jan 2017 2:15 AM IST (Updated: 22 Jan 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் பெண் உயிரிழந்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் பெண் உயிரிழந்தார்.

47 ஏக்கர் நிலத்தில்...

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53) விவசாயி. இவருடைய மனைவி ருக்மணி (50). இவர்களுக்கு சமுத்திரராஜ் (29) என்ற மகனும், கோகிலா (25) என்ற மகளும் உள்ளனர். சமுத்திரராஜ், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு, 2 டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்திலும், குத்தகைக்கு எடுத்து 42 ஏக்கர் நிலத்திலும் மானாவாரி பயிர்களான பாசி, உளுந்து, மக்காச்சோளம், கம்பு, பருத்தி பயிரிட்டனர். இதற்காக அவர்கள் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். மேலும் ஒரு டிராக்டரையும் ரூ.2 லட்சத்துக்கு விற்று, விவசாயத்துக்கு செலவு செய்தனர்.

பயிர்கள் கருகிய அதிர்ச்சியில்...

பருவமழை பொய்த்ததால், அனைத்து பயிர்களும் தண்ணீரின்றி கருகின. நேற்று முன்தினம் ருக்மணி சிதம்பராபுரத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு கருகிய பயிர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ருக்மணி, எப்படி கடன்களை திருப்பி செலுத்த போகிறோம்? என்று வேதனையுடன் புலம்பியவாறு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story