டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை ஆட்டோவில் அள்ளிச்சென்ற கும்பல் போலீசார் வலைவீச்சு


டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை ஆட்டோவில் அள்ளிச்சென்ற கும்பல் போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Jan 2017 4:30 AM IST (Updated: 27 Jan 2017 4:25 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, புகுந்து மது பாட்டில்களை ஆட்டோவில் அள்ளிச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கயத்தாறு,

ஆட்டோவில் அள்ளிச் சென்றனர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனாரூத்து- தேவர்குளம் மெயின் ரோட்டில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு பக்கத்து ஊரான ஆத்திகுளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவில் இசக்கிமுத்து வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டுச் சென்றார்.

பின்னர் நள்ளிரவில் அங்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, ஷட்டரை திறந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை ஆட்டோவில் அள்ளிச் சென்றனர். ஆட்டோவில் கொண்டு செல்ல முடியாத மதுபாட்டில்களை டாஸ்மாக் கடையின் அருகில் வைத்துச் சென்றனர்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். டாஸ்மாக் கடையின் அருகில் ஆட்டோ வந்து சென்றதற்கான டயர் தடம் பதிந்து இருந்தது. தடயவியல் நிபுணர்கள் டாஸ்மாக் கடையில் பதிந்திருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

டாஸ்மாக் கடையில் இருந்து ரூ.77 ஆயிரத்து 774 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் ஆட்டோவில் அள்ளிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இந்த டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story