தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் திருமண உதவித்தொகை, இலவச கியாஸ் இணைப்பு வழங்க கோரிக்கை


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு  மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் திருமண உதவித்தொகை, இலவச கியாஸ் இணைப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2017 10:45 PM GMT (Updated: 30 Jan 2017 2:53 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு திருமண உதவித்தொகை, இலவச கியாஸ் இணைப்பு வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடனுதவி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இந்த கூட்டத்தில் பிக்கிலி கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், பிக்கிலி கொல்லப்பட்டி பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடும் வறட்சி காரணமாக எங்களுக்கு விவசாய பணிகள் கிடைக்கவில்லை. தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியும் கடந்த 5 மாதங்களாக இந்த பகுதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வேலைவாய்ப்பின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியை மீண்டும் செயல்படுத்தி எங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்ணா

பாலவாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான வினோத், அவருடைய மனைவி ஜெசிந்தாமேரி ஆகியோர் தங்கள் 1 வயது குழந்தை சாமுவேலுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கடந்த 2015–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் பாலவாடியை சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளி தம்பதியான சுரேஷ், முத்துலட்சுமி ஆகியோரும் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து இலவச கியாஸ் இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

பயிர் கடன்

வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார். தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத்தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ£ரியிருந்தனர்.

Next Story