பேரையூர் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்


பேரையூர் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-02-01T12:01:56+05:30)

பேரையூர் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்.

பேரையூர்,

தரம் உயர்வு

பேரையூர் தாலுகாவில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வையூர் கிராமத்தில் பகுதி நேரமாக இயங்கி வந்த கால்நடை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் பல நவீன முறைகளை கொண்ட முழுநேர கால்நடை மருத்துவமனையாக செயல்பட தரம் உயர்த்தி கட்டி முடிக்கப்பட்டது.

இதை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- அரசு பால் வரத்து எண்ணிக்கையை உயர்த்த கால்நடைகளுக்கு நோய் நொடியில்லாமல் வெண்மை புரட்சி ஏற்படுத்தும் வண்ணமாக இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, முழு நேர மருந்தகமாக உருவாகி உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் பயனடைவார்கள்.

காவல்துறை

மேலும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதித்து வருகின்றன. தமிழக அரசு, தமிழக மக்களின் வீரவிளையாட்டை நிரந்தரமாக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. உலகத்திலேயே தமிழக காவல்துறை மட்டும்தான் காவல்துறை உங்கள் நண்பன் என்ற முறையில் மக்களோடு இணைந்து செயல்படுகிறது.

ஜல்லிக்கட்டு தடை நீக்க போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த போது, மக்களோடு மக்களாக உற்ற நண்பனாக விளங்கியது தமிழக காவல்துறை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவதுறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story