புவனகிரியில் கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை; மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன பதற்றம்–போலீஸ் குவிப்பு


புவனகிரியில் கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை; மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன பதற்றம்–போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-30T22:31:24+05:30)

புவனகிரியில் நடந்த கோஷ்டி மோதலில் 3 வீடுகள் சூறையாடப்பட்டன. 4 மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

புவனகிரி,

கோஷ்டி மோதல்

கிழ்புவனகிரி தாமரைகுளத்தை சேர்ந்தவர் சுப்புராயலு. இவருடைய மகன் சதாசிவம்(வயது 20). இவரும், இவருடைய நண்பரான கலையரசன்(24), அதே பகுதியை சேர்ந்த செல்வம்(55) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு புவனகிரி பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தம்பிக்குநல்லான்பட்டிணத்தை சேர்ந்த அருள், மணிமாறன், அன்பு உள்பட 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென சதாசிவம் உள்பட 3 பேரிடமும், எங்கள் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, கார்த்தியேன் ஆகிய 2 பேரையும் அடித்தது ஏன்? என கேட்டனர். இதனால் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு, கோஷ்டி மோதலாக உருவானது. இதில் ஆத்திரமடைந்த அருள் தரப்பினர் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் சதாசிவம் தரப்பினரை தாக்கினர்.

3 வீடுகள் சூறை

மேலும் அருள் உள்பட 7 பேரும் கிழ்புவனகிரி தாமரைகுளத்துக்கு சென்று சதாசிவம், செல்வம், கலையரசன் ஆகிய 3 பேரது வீடுகளையும் சூறையாடினர். அங்கு நிறுத்தி வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் அவர்கள் அடித்து நொறுக்கினர். இது பற்றி அறிந்ததும் கீழ்புவனகிரி பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும், அருள் உள்பட 7 பேரும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் சதாசிவம், செல்வம், கலையரசன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர், மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்க 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 பேருக்கு வலைவீச்சு

இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையிலான போலீசார் நேரில் வந்து, சூறையாடப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இது குறித்து சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் உள்பட 7 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story