காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 30 Jan 2017 6:51 PM GMT)

காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில்,

கொள்ளை

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அத்திப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(வயது 39), தொழிலாளி. இவர் குடும்பத்துடன் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலச்சந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் உடனடியாக அத்திப்பட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. இதையடுத்து பீரோவை சோதனை செய்த போது, அதில் வைத்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார், கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை மர்மநபர்கள் நோட்டமிட்டு நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்ததது.

இதற்கிடையே தடயவியல் நிபுணர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்துச் சென்றனர். இதுகுறித்து பாலச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story