காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை


காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 30 Jan 2017 11:00 PM GMT (Updated: 30 Jan 2017 5:36 PM GMT)

10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராஜபாளையம் அருகே பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராஜபாளையம்,

குடிநீர் பிரச்சினை

ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியர்புரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் தண்ணீர் தேவைக்காக 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மோட்டார்கள் பழுதடைந்து உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தற்போது வறட்சி நிலவுவதால், பயன்பாட்டில் உள்ள 4 மின் மோட்டார்களை கொண்டு இரு நாட்களுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு தலா 5 குடம் உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இயங்கிக்கொண்டிருந்த மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன.

இது குறித்து பல முறை கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தண்ணீர் வராததால், பொது சுகாதார நிலையத்தை கூட பயன்படுத்த முடியாத நிலையில் விஷ ஜந்துகள் நடமாடும் இடத்தை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

முற்றுகை-வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று காலையும் தண்ணீர் வராததால், ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும், வட்டார வளர்ச்சி அலுவலர் வான்மதி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.10 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றனர். தங்கள் மனுவுக்கு இது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுவரை எந்த மனுவும் தனது பார்வைக்கு வரவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்ததால் பெண்கள், ஊராட்சி கணக்காளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சேத்தூர் போலீசார் அங்கு வந்து பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் ஊராட்சி துறையினர் உறுதி அளித்ததால் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story