மேல்மலையனூர் அருகே, தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்


மேல்மலையனூர் அருகே, தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்
x
தினத்தந்தி 30 Jan 2017 11:15 PM GMT (Updated: 2017-01-30T23:46:02+05:30)

மேல்மலையனூர் அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி

மேல்மலையனூர்,

இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ரத்தக்காயங்களுடன் பிணம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வடவெட்டி கிராமத்தில் உள்ள சாலையோரத்தில் கடந்த 22-ந் தேதி மாலையில் ரத்தக்காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலில் இருந்த ரத்தக்காயங்களை வைத்து பார்த்தபோது, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் திருவண்ணாமலை மண்டி வீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜசேகர்(வயது 52) என்பது தெரியவந்தது.

அடித்துக்கொன்றது அம்பலம்

ராஜசேகரை பற்றி விசாரணை நடத்தியபோது, பரபரப்பு தகவல்கள் வெளியானது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜசேகர், பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளார். இதுபோன்று மோசடி செய்ததாக கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

இது தவிர திருவண்ணாமலை மாவட்டம் தள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(வயது 22), மகேஷ்குமார்(45), அவருடைய மனைவி சுதா(40), சுரேஷ்(20), ரமேஷ்(22), தாமஸ்(23), சாலக்குப்பத்தை சேர்ந்த முருகன்(19), பிரபு(20), நூக்கம்பாடியை சேர்ந்த செந்தில்(23) ஆகிய 9 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜசேகர் ரூ.8 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி அவர்களுக்கு ராஜசேகர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கவில்லை.

9 பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் உள்பட 9 பேரும் சேர்ந்து ராஜசேகரை அடித்துக் கொலை செய்து, மேல்மலையனூர் அருகே உள்ள வடவெட்டி கிராமத்தில் உடலை வீசிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார் உள்பட 9 பேரையும் வளத்தி போலீசார் கைது செய்தனர்.

கைதான 9 பேரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகர், எங்களுக்கு அறிமுகம் ஆனார். அப்போது அவர், தான் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், எனக்கு அரசு உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய பழக்கம் இருப்பதாகவும், அதன் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர், யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

இதை உண்மை என்று நம்பி நாங்கள் 9 பேரும் மொத்தம் ரூ.8 லட்சத்தை ராஜசேகரிடம் கொடுத்தோம். பணத்தை வாங்கிய அவர், 6 மாதத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். ஆனால் அவர் வேலை வாங்கித்தரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது, சரியான பதிலை கூறவில்லை. இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆட்டோவில் கடத்தி...

ராஜசேகர் பற்றி அவர் வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரித்தோம். அப்போதுதான், அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யவில்லை எனவும், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கிக்கொண்டு பலரை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்ததது.

இதையடுத்து ராஜசேகரை நேரில் சந்தித்து, நாங்கள் கொடுத்த ரூ.8 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டோம். ஆனால் அவர் பணத்தை கொடுக்க முடியாது என்று கூறினார். இது குறித்து கடந்த 3.8.2016 அன்று கொடுத்த புகாரின் பேரில் கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது போலீசார் விசாரித்தபோது, ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறினார். ஆனால் ராஜசேகர் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே 9 பேரும் சேர்ந்து, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

அதன்படி கடந்த 22-ந் தேதி காலையில் ராஜசேகரை ஆட்டோவில் கடத்தி, 9 பேரும் சேர்ந்து அடித்துக்கொன்றோம். பின்னர் ராஜசேகரின் உடலை, அதே ஆட்டோவில் கொண்டுவந்து வடவெட்டி கிராம சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story