குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதால் ஆத்திரம்: டிராவல்ஸ் அதிபர் மகன் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது


குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதால் ஆத்திரம்: டிராவல்ஸ் அதிபர் மகன் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 30 Jan 2017 6:49 PM GMT (Updated: 30 Jan 2017 6:49 PM GMT)

குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதால் தாக்கப்பட்ட டிராவல்ஸ் அதிபர் மகன் இறந்தார்.

சேலம்,

தாறுமாறாக சென்ற கார்

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து திருச்சி ரோடு வழியாக கடந்த 28-ந் தேதி இரவு சேலம் பழைய பஸ் நிலையம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது, சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியும், ரோட்டில் நடந்து சென்ற மக்களை இடித்தும், சிக்னலில் நிற்காமலும் தாறுமாறாக அதிவேகமாக கார் சென்றது.

இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காரில் இருந்த டிரைவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். மேலும், காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

டிராவல்ஸ் அதிபர் மகன் சாவு

இது குறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார் ஓட்டியவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர், சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் மைக்கேல்ராஜ் என்பவரின் மகன் ஆசிஸ் இக்னோசியஸ் (வயது 25) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்னையில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு ஊர் ஊராக சுற்றி வந்ததும், பிறகு சேலத்திற்கு வந்தபோது பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆசிஸ் இக்னோசியஸ் நினைவு திரும்பாமலேயே நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

4 வாலிபர்கள் கைது

இதையடுத்து போலீசார், அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த முத்தையன்(வயது23), சவுந்தரராஜன்(20), அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த முத்து(24), செந்தில்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வாக்குமூலம்

முன்னதாக கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், “காரை ஓட்டிய டிரைவர்(ஆசிஸ் இக்னோசியஸ்) குடிபோதையில் தாறுமாறாக சேலம்-திருச்சி மெயின் ரோட்டில் ஓட்டிச்சென்றார். மேலும் ரோட்டில் சென்ற பொதுமக்கள் மீது மோதி இடித்து தள்ளிவிட்டு கார் வேகமாக சென்றது.

எனவே, அந்த காரை நிறுத்தி டிரைவரிடம் தட்டிக்கேட்டோம். அப்போது அவர் மதுபோதையில் இருந்தார். அத்துடன் எங்களை அவர் தாக்கவும் முற்பட்டார். அதனால், நாங்களும் அவரை பதிலுக்கு தாக்க வேண்டியதாயிற்று. கொலை செய்யும் நோக்கத்தில் அவரை தாக்கவில்லை“ என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story