தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்


தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2017 7:02 PM GMT (Updated: 30 Jan 2017 7:02 PM GMT)

தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

நெல்லை,

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லை டவுன் கென்னடி இளைஞர்கள் குழுவை சேர்ந்தவர்கள், சங்கர்நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டது. அதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு குடிதண்ணீர் தாராளமாக வழங்கப்பட்டு வருகிறது. வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலை தாமிரபரணி ஆற்றில் இருந்து நீரை எடுத்து வருகிறது. அதேபோல் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரை அதிக அளவு எடுத்து வருகின்றன. மதுரை ஐகோர்ட்டு தடை இருந்தும் குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன. அந்த நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்று நீரை எடுக்க தடை விதிக்க வேண்டும். மேலும் நெல்லை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

தே.மு.தி.க. ஆலங்குளம் நகர செயலாளர் பழனிசங்கர் தலைமையில், பொது மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “ஆலங்குளம் நேருஜி நகரில் பிளாஸ்டிக் அரைக்கும் ஆலை உள்ளது. அதில் இருந்து வெளியேறும் புகை அருகில் உள்ள குடியிருப்புகளில் செல்வதால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அந்த பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருகி அந்த ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் உஸ்மான்கான் தலைமையில் அந்த கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் “மேலப்பாளையத்தில் ஒருங்கிணைந்த ஆடு அறுப்புமனை 23-12-2009-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் மட்டும் செயல்பட்டது. அதன் பிறகு மூடப்பட்டு விட்டது. அதை மீண்டும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

சேரன்மாதேவி நெசவாளர் காலனி பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு தலைவர், தலைமை ஆசிரியர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர்.

கல்குவாரி

அவர்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பள்ளி அருகே தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் வெள்ளை கிரானைட் கல்குவாரி உள்ளது. அங்கு சில சமயங்களில் வெடி வைத்து கல்களை எடுக்கிறார்கள். இதனால் பள்ளியின் கட்டிடங்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து கல்குவாரி செயல்பட்டால் பள்ளிக்கட்டிடங்கள் சேதமடையும். எனவே கல்குவாரி வேலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

திராவிட மக்கள் விடுதலை கட்சி சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் “ஆலங்குளம் அருகே உள்ள கடங்குனேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடேஷபுரத்தில் நரிக்குறவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு புதிய குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

நிலம் மோசடி

சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்த கணேசன் மனைவி சுப்புலட்சுமி (வயது 53). இவர் வளர்ச்சிமன்ற கூட்ட அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும் போது, “நான் குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் வசித்து வருகிறேன். வீரசிகாமணியில் எனக்கு 42 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து, மோசடி செய்து விட்டனர். அதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். எனது நிலத்தை மீட்டு தர வேண்டும்“ என்று கூறினார்.

தொடர்ந்து அவர் தனது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தார். இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குடிதண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுத்தனர்.

Next Story