வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 Jan 2017 7:52 PM GMT (Updated: 2017-01-31T01:22:40+05:30)

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அடுக்கம்பாறை,

ஆக்கிரமிப்புகள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனைக்கு நுழையும் இடத்தில் சாலையோர கடைகள் அதிகளவில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தன. அதைத்தொடர்ந்து பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இரும்பு கம்பிகளால் ஆன வேலி அமைத்தது.

போலீசாருடன் வாக்குவாதம்

பின்னர் அங்கு கடைகள் எதுவும் வைக்கவில்லை. இதனால் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் சென்று வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இடத்தில் திடீரென ஆக்கிரமித்து சிறு, சிறு தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை வியாபாரிகள் வைத்தனர். வேலியை ஒட்டியபடி கடைகள் வைத்துள்ளதால், மருத்துவமனைக்குள் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு செல்லும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை, 100 மீட்டர் தொலைவுக்கு சிலர் வெட்டி விட்டனர். மேலும் அந்த இடத்தில் கடைகளின் அளவை பெரிதாக்கிவிட்டனர்.

இதனை அறிந்த பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 11 மணியளவில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த வியாபாரிகள் போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர் களை எச்சரிக்கை செய்து கலைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story