முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளிக்கு கத்திக்குத்து


முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 30 Jan 2017 8:58 PM GMT (Updated: 30 Jan 2017 8:58 PM GMT)

முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியை கத்தியால் குத்திய சகதொழிலாளி, இதை தடுக்க முயன்ற அவருடைய தாயையும் கத்தியால் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்தார்.

கூலி தொழிலாளிக்கு கத்திக்குத்து

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு மேல்காலனியை சேர்ந்தவர் அசோக்(வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவருக்கும் கடந்த வாரம் கீழ்மேனி கிராமத்தில் கூலிவேலை செய்தபோது பிரச்சினை ஏற்பட்டு, தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அசோக்கிடம், கோவிந்தராஜ் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அசோக்கை குத்தினார்.

தாய் படுகாயம்

இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். மகனின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாய் சிவகாமி ஓடி வந்து கோவிந்தராஜை தடுத்தார். அப்போது அவரையும் கத்தியால் குத்தி விட்டு கோவிந்தராஜ் தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த தாய்–மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கோவிந்தராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story