புதுவையில் டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி


புதுவையில் டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி
x
தினத்தந்தி 30 Jan 2017 9:33 PM GMT (Updated: 30 Jan 2017 9:33 PM GMT)

புதுவையில் டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் டாக்டர்கள் உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜிப்மர், கோரிமேடு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

டாக்டர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி

புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலுக்கு முருங்கப்பாக்கம் மற்றும் காலாப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து சுகாதார துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்கள், ஏற்கனவே சிகிச்சை பெற்று பன்றிக்காய்ச்சலுக்கு பலியான 2 பேருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், ஓய்வு பெற்ற ஜிப்மர் டாக்டர் உள்பட 12 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறி உள்ளதா? என்பதை அறிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் முடிவு தெரியவந்ததில் ஜிப்மர் மருத்துவமனை டாக்டர், ஓய்வு பெற்ற டாக்டர் உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.

தனி வார்டில் சிகிச்சை

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஜிப்மர் டாக்டர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. யாராவது தீராத சளி, காய்ச்சலால் அவதிப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஜிப்மர் மருத்துவமனை, கோரிமேடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கபசுர குடிநீர்

பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குடிநீரில், சுக்கு திப்பிலி, லவங்கம், முள்ளிவேர், ஆடாதோடை, கடுக்காய்தோல், சிறுகாஞ்சொறிவேர், அக்கிராகாரம், கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டதிருப்பு, கோரைக்கிழங்கு ஆகிய 15 மூலிகைகள் அடங்கி உள்ளன. இந்த குடிநீர் சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அவரவர் வயதிற்கு ஏற்றபடி வழங்கப்பட உள்ளது.

நாராயணசாமி பேட்டி

இதுகுறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜிப்மரிலும், கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தனி டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயநல மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியோடு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் அரசிடம் இருப்பில் உள்ளன.

புதுச்சேரியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தவும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story