பழையூர் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மனு


பழையூர் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மனு
x
தினத்தந்தி 30 Jan 2017 9:33 PM GMT (Updated: 30 Jan 2017 9:33 PM GMT)

பழையூர் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

காலிகுடங்களுடன் வந்த பெண்கள்

கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாவூர் ஊராட்சி பாழையூர் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் காலிகுடங்களுடன் மனு கொடுக்க செல்ல கூடாது என கூறினார்கள். இதைத்தொடர்ந்து பாழையூர் பகுதியை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாழையூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் வசதி இல்லை. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

கீரனூர் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், குளத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தினர் அனைவரும் இணைந்து அய்யனார் கோவில் சார்பில் தமிழர்களின் வீரவிளையாட்டை மஞ்சுவிரட்டு வருகிற 1–ந் தேதி (நாளை புதன்கிழமை) முடிவு செய்து உள்ளோம். எனவே கோவில் சார்பில் நடத்தப்படும் இந்த மஞ்விரட்டுக்கு அரசு ஆணைப்படி நடத்த கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மிரட்டல்

புதுக்கோட்டை நரிமேடு சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மனைவி மதியரசி தனது குடும்பத்தினருடன் கொடுத்த மனுவில், எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் எனது மகள் திருமணத்திற்குகாக ஒருவரிடம், எனது வீட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பவர் பதிவு செய்து கொடுத்து பணம் வாங்கினேன். பின்னர் அந்த பண கட்டி விட்டேன். இருப்பினும் பணம் வாங்கியதற்காக வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டி வருகிறார். இதனால் நான் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்து உள்ளேன். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வேண்ம் என கூறியிருந்தனர். பின்னர் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story