சேறும்–சகதியுமாக மாறிய சாலையில் நாற்றுகளை நட்டு பொதுமக்கள் போராட்டம்


சேறும்–சகதியுமாக மாறிய சாலையில் நாற்றுகளை நட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2017 9:33 PM GMT (Updated: 2017-01-31T03:04:00+05:30)

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பேரளி கிராமத்தில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக உருக்குலைந்து விட்டன. மேலும் ஆங்காங்கே சாலையில் நீர் தேங்கி கிடக்கிறது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பேரளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வடக்குதெரு, தெற்குதெரு, மேற்குதெரு, கிழக்குதெரு, நடுத்தெரு ஆகிய இடங்களில் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாததால் மண் சாலையாகவே இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் பேரளி கிராமத்தில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக உருக்குலைந்து விட்டன. மேலும் ஆங்காங்கே சாலையில் நீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் பொதுமக்கள் இந்த சாலைகள் வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் செல்வோர் வழுக்கி கீழே விழுந்து விடுவோமோ? என அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த நிலையில் பேரளி கிராமத்தில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெற்குதெரு பகுதியில் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தை நேற்று நடத்தினர். அப்போது உருக்குலைந்து காணப்பட்ட சாலையில் நாற்றுகளை நட்டு சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story