தகவல் பெறும் உரிமை சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது சித்தராமையா பேச்சு


தகவல் பெறும் உரிமை சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:41 PM GMT (Updated: 30 Jan 2017 10:41 PM GMT)

தகவல் பெறும் உரிமை சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

தகவல் பெறும் உரிமை சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சித்தராமையா கூறினார்.

தகவல் பெறும் ஆர்வலர்கள்

பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன் பகுதியில் மாநில தகவல் ஆணைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்திற்கு மாகிதி(தகவல்) சவுதா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுநலன் மற்றும் அவசியமான விஷயங்களுக்காக அரசிடம் இருந்து தகவல்களை பெற வேண்டும். அதை விடுத்து தகவல் பெறுவதையே தொழிலாக கொண்டு செயல்படுவது சரியல்ல. இந்த நிலை மாற வேண்டும். தகவல் பெறும் ஆர்வலர்கள் என்று எந்த சட்டத்திலும் இல்லை. ஆனால் சிலர், தாங்கள் தகவல் பெறும் ஆர்வலர்கள் என்று அடையாள அட்டை அச்சிட்டு கொண்டுள்ளனர்.

தவறாக பயன்படுத்தக்கூடாது

தகவல்களை பெற அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்காக தகவல் பெறும் ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்வது சரியல்ல. அரசு, மந்திரிகள், அதிகாரிகள் ஊழல் செய்தால் அதை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது.

தகவல் பெறும் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் வேலை உறுதி திட்டம் ஆகியவை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகள் ஆகும். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக பணியாற்ற வேண்டும்.

ரூ.17 கோடியில்...

ஆட்சி நிர்வாகத்தில் பாரபட்சமற்ற தன்மையை ஏற்படுத்தவே இந்த தகவல் பெறும் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. இன்று (அதாவது நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டிடம் ரூ.17 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் மாநில தகவல் ஆணையத்தின் செயலியை சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மந்திரிகள் ஜெயச்சந்திரா, மகாதேவப்பா, மேயர் பத்மாவதி, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, மாநில தகவல் தலைமை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story