போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இளைஞர்கள்–இளம்பெண்கள் ஆர்வம்


போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இளைஞர்கள்–இளம்பெண்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 30 Jan 2017 10:43 PM GMT (Updated: 30 Jan 2017 10:43 PM GMT)

போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமாக இருப்பதால், ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.

இளம்பெண்கள் ஆர்வம்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு காவல்துறைக்கு புதிதாக ஆண்–பெண் போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 23–ந் தேதி தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.30 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வருகிற 22–2–2017 கடைசி நாளாகும்.

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் கடந்த 23–ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது. தொடக்கம் முதலே இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக அளவில் வந்து விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர். நேற்று விண்ணப்பம் பெற வழக்கத்தை விட ஏராளமான இளைஞர்கள் கூடி இருந்தனர். இளம்பெண்களும் ஆர்வமாக விண்ணப்பங்களை வாங்கிச்சென்றனர்.

10 ஆயிரம் விண்ணப்பங்கள்

ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் நேற்று வரை 7 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.

இதுபற்றி தபால் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘காவல்துறை ஆள் சேர்ப்பு விண்ணப்ப படிவம் தேவையான அளவுக்கு வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் நேரில் வந்து வாங்கி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் இதுவரை 7 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இதுபோல் பவானி, கோபி, பெருந்துறை ஆகிய தலைமை தபால் நிலையங்களிலும் தலா 1000 விண்ணப்பங்களுக்கு மேல் விற்பனையாகி உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன’ என்றார்.


Next Story