கோவை விமான நிலையத்துக்கான சர்வதேச உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை


கோவை விமான நிலையத்துக்கான சர்வதேச உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2017 10:47 PM GMT (Updated: 30 Jan 2017 10:47 PM GMT)

கோவை விமான நிலையத்துக்கான சர்வதேச உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையம்

தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவை விமானநிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது ஆண்டுக்கு 16 லட்சத்துக்கு மேற்பட்டோர் கோவையில் இருந்து விமான சேவையை பெற்று வருகின்றனர்.

சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய உள்நாட்டு விமான போக்குவரத்து தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. இது தவிர சிங்கப்பூர், ஷார்ஜாவுக்கு செல்லும் விமான சேவையும் உள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வகையில் கோவை விமான நிலையம் சர்வதேச தரத்துடன் இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

ஓடுபாதை

இதனால் பன்னாட்டு விமான போக்குவரத்து இன்னும் தொடங்காமல் உள்ளது. சர்வதேச விமான நிலையத்துக்கான வரைமுறைப்படி, கோவை விமான நிலையத்தை பொறுத்தவரை விமான ஓடுதளம் 12 ஆயிரம் அடியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஓடுபாதை 9 ஆயிரத்து 766 அடியாகவே உள்ளது.

எனவே ஓடுபாதையை விரிவாக்கம் செய்வது மற்றும் தற்காலிக உரிமம் மட்டுமே உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நிரந்தர உரிமம் கிடைப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

விரிவாக்கம்

கோவையில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவை தொடங்கினால், முன்னணி ஐ.டி.நிறுவனங்கள் கோவைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே விரிவாக்கத்திட்டம் என்பது அவசியமாக உள்ளது. இந்த திட்டத்துக்கான நில மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அரசிடம் நிதி ஒதுக்கீடு கிடைத்தால் நில உடமைதாரர்களுக்கு தொகை வழங்கப்படும்.

கோவை விமான நிலையத்தில் சர்வதேச தரத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 628.27 ஏக்கரில் விரிவாக்கம் செய்வதற்கு கடந்த 2010–ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. நில ஆர்ஜித பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் விமான நிலைய விரிவாக்க திட்டம் முடங்கி உள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஓ.ஏ.) தற்காலிக உரிமத்தை மட்டுமே வழங்கி வருகிறது.

உரிமம் புதுப்பிக்க வேண்டும்

விரிவாக்க திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த உரிமம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடைகிறது. இதனால் உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த உரிமம் புதுப்பிக்க வேண்டுமானால், கோவை விமானநிலையத்தில் முதல் கட்டமாக 60 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தை ஆர்ஜிதப்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர விரிவாக்க திட்டத்துக்கு நிலம் கிடைக்கும் வரை கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அடிப்படை வசதிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வணிக நிறுவனங்கள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story