திண்டுக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு


திண்டுக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:57 PM GMT (Updated: 30 Jan 2017 10:57 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 6 ஆயிரத்து 952 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

புதுவாழ்வு திட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சாணார்பட்டி, நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஊராட்சி நரிக்கல் கிராமத்தில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.

இந்த திட்டம் குறித்து அவர் கூறியதாவது:–

ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வறுமையை குறைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதன் மூலம் அவர்களின் திறன்களை வளர்த்து, தொழில் தொடங்க தேவையான நிதியினை பெற்று தருவதோடு உற்பத்தி செய்த பொருட்களை சந்தைபடுத்தி பொருளாதாரத்தை மேம்பாடு அடைய வழிவகை செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்

கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்காக ஒரு ஊராட்சிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படுகறது. அதன்படி 8 ஆயிரத்து 142 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் திறன் வளர்ப்பு பயிற்சி பெற்று, அவர்களில் 6 ஆயிரத்து 952 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி கிராம ஊராட்சிகளில் 121 கிராம கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கப்பட்டு பயன் பெற்றுள்ளனர். 8 ஆயிரத்து 998 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் தொழில் தொடங்குவதற்காக கடன் வழங்கப்பட்டுள்ளது.

நலவாழ்வு அடையாள அட்டை

37 ஆயிரத்து 765 பெண்களுக்கு நலவாழ்வு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல பால் பண்ணை அமைத்தல், ஆடு வளர்ப்பு, ஆயத்த ஆடைகள் தயாரித்தல், காய்கறிகள், பூக்கள் சாகுபடி செய்தல் ஆகிய தொழில்களை தொடங்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களில் 20 முதல் 50 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்களின் பயிற்சி, களப்பணி, உள்கட்டமைப்பு வசதிக்காக ஊராட்சி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.13 கோடியே 16 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2,528 சுய உதவிக்குழுவினர் பயன்பெற்றுள்ளனர். 78 குழுக்களுக்கு ரூ.65 லட்சத்து 94 ஆயிரம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

நரிக்கல் கிராமத்தில் தமிழக அரசின் சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் செயல்பாட்டிற்காக ரூ.17 கோடியே 97 லட்சம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story