குடிநீர் முறையாக வினியோகம் செய்யக்கோரி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வத்தலக்குண்டுவில், முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் குன்னுவாரன்கோட்டை ஊராட்சி கரட்டுப்பட்டியில் சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதற்கிடையில், இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டன. மேலும் பல மின்மோட்டாரும் பழுதடைந்தன. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகைஇதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தண்ணீரை தேடி தோட்டங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிகாரிகள் சென்று விட்டனர். எனவே ஒரு சில பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்தனர். இதனால் பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைஉடனே இதுகுறித்து தகவல் அறிந்ததும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல்முருகன், வத்தலக்குண்டு சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.
இதை ஏற்காத பொதுமக்கள் கடந்த மாதம், இதேபோன்று போராட்டம் நடத்தியபோது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கிராமம் பக்கமே வரவில்லை. மீண்டும் அதேபோன்று ஏமாற்றுவதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.