குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் கிராமமக்கள் மனு


குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் கிராமமக்கள் மனு
x
தினத்தந்தி 31 Jan 2017 12:03 AM GMT (Updated: 2017-01-31T05:33:34+05:30)

குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் சங்கரிடம் பாட்டயவயலை சேர்ந்த கிராமமக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் சாலை வசதி, வீட்டுமனை பட்டா, நடைபாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:– நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாட்டவயல் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மதுக்கடை அகற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் அதிகம் வாழும் சந்தனம்சிறா என்ற பகுதியில் சம்பந்தப்பட்ட மதுக்கடை திறக்கப்பட உள்ளது.

பெண்கள், மாணவர்கள்

இந்த பகுதி வழியாகத்தான் கரிம்மன்மூலா, நெல்லாக்கனி, ஆரவல்லி டெம்பிள், வெள்ளேரி, பாட்டவயல் சோதனைச்சாவடி ஆகிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதனால் எப்போதும் சந்தனம்சிறா பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காணப்படும். மேலும் பள்ளி செல்லும் மாணவ–மாணவிகளும் இந்த வழியாக செல்கின்றனர். கோவிலுக்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியது உள்ளது. ஆதிவாசி மக்கள் உள்பட அனைவரும் அன்றாடம் கூலி வேலைக்குதான் செல்ல வேண்டியது உள்ளது. இந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டால் தொழிலாளர்கள் சம்பளம் முழுவதும் மதுக்கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதுதவிர பெண்கள், மாணவிகள் இந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சந்தனம்சிறா பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது எனவே எங்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதிகள் இல்லாத மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சேரங்கோடு ஊராட்சி

இதேபோல் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்குன்னு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்குன்னு பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வரும் சாலையை மறித்து வனத்துறையினர் சுற்றுச்சுவர் கட்டும் பணியினை தொடங்கி உள்ளனர்.

இந்த சுற்றுச்சவர் கட்டுவதால் கோவில், அங்கன்வாடி குடிநீர் தொட்டி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வது தடை படும். மேலும் நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்ல இந்த ஒரு சாலை மட்டுமே உள்ளது. எனவே சாலையை மறித்து வனத்துறையினர் கட்டி வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறின்றி சாலையை மறிக்காமல் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story